
டாக்டர் சுங்-ஹியுன் யூன்
பாரிஸ் ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் தமிழ் திருச்சபையின் போதகர்
கிறிஸ்துவுக்குள்ளான அன்பான சகோதர சகோதரிகளே,
நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன் ! ஆழ்ந்த நன்றியுர்ணவுடனும் தாழ்மையுடனும் உங்களுடன் பாரிஸ் ஏழாம் நாள் அட்வெண்டிஸ்ட் தமிழ் திருச்சபையின் புதிய போதகராக எனது பணியை துவங்குகிறேன்.
நான் மார்ச் 22, 1974 அன்று தென் கொரியாவில் பிறந்தேன். தேவ கிருபையால் ஒர் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்தேன் : இப்படியாக சபையும் கிறிஸ்தவ போதனைகளும் எனது முதல் விசுவாச பாதையை உருவாக்கின. எனக்கு இருபது வயதாகும் போது, தனிப்பட்ட முறையில் தேவனின் மாற்றும் தன்மையுள்ள அவரது அன்பை உணர்ந்தேன் : அந்த அன்பு எனது முழு வாழ்வையும் அவரது ஊழியத்திற்காய் அர்ப்பணிக்க என்னை ஊக்கப்படுத்தியது. அன்று முதல் இன்று வரை, கிழக்கு திமோர், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, நியு-சிலாந்து, மலேசியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் எனது ஊழிய மற்றும் போதகரின் பணிகளில் ஆண்டவர் என்னை நடத்தி வருகிறார்.
சுவிசேஷ ஊழியத்தில் பணிபுரிய ஜனவரி 30, 2012 அன்று அபிஷேகம் பெற்றேன். 2024வில் சர்வதேச அட்வென்டிஸ்ட் பல்கலைக்கழகத்தில் (AIIAS) முறையான இறையியலை பற்றின எனது PhD படிப்பை செய்து முடித்தேன். எனது மனைவி ஜிவோன் மற்றும் எனது மூன்று பிள்ளைகள், ஹியேன் (14 வயது), யூஜின் (13 வயது), யீன் (9 வயது) என்னுடன் இணைந்து குடும்பமாக தேவனை சேவிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இப்பொழுது, பாரிஸிலுள்ள தமிழ் திருச்சபை, கொரிய திருச்சபை மற்றும் சர்வதேச திருச்சபையை சேவிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது.
கிறிஸ்து தம்முடைய சீடர்களை வழிநடத்தியது போல் ஒர் போதகராக நான் வழிநடத்த விரும்புகிறேன். தேவனின் குணத்தை பிரதிபலிப்பதும், முத்தூதின் நித்திய சுவிசேஷத்தை பிரசங்கிப்பதும், ஒவ்வொரு அங்கத்தினரும் கிறிஸ்துவின் சீடராக வளர ஊக்கப்படுத்துவதே எனது வாஞ்சையாக இருக்கிறது. வேதாகமத்தின் இவ்வசனதை உறுதியாக பற்றிக்கொண்டிருக்கிறேன் : “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.” (1 பேதுரு 5:2-4). இந்த அழைப்பின் படி உங்களுடன் ஜெபத்திலும், ஆராதனையிலும், ஐக்கியத்திலும், ஊழியத்திலும் நடக்க ஆசிக்கிறேன்.
எல்லோரும் தேவனின் வசனத்தால் வரவேற்கப்பட்டு, பெலமடைந்து, அவரது கிருபையின் சாட்சிகளாக திகழ அவரது ஆவியினால் பெலமடையும் ஓர் விசுவாச வீடாக நமது திருச்சபை இருக்க வேண்டுமென்று ஆசிக்கிறேன். பாரிஸில் கிறிஸ்துவின் அதி சீக்கிர வருகையை அறிவிக்கும் நமது வாழ்க்கை அவரது ஒளியை பிரகாசிக்கப்பண்ணட்டும்.
தேவன் மீண்டும் வருமளவும் உங்களை உண்மையுள்ளவர்களாக காத்து உங்களை மேலாக ஆசீர்வதிப்பாராக !
ஜெபத்துடனும் அன்புடனும்,
போதகர் சுங்-ஹியுன் யூன், PhD
பாரிஸ் ஏழாம் நாள் அட்வெண்டிஸ்ட் தமிழ் திருச்சபை.
